Skip to main content

Gene N Genie Diet Clinic

Tag: Treatment

உலக நீரிழிவு நோய் தினம் – 14 நவம்பர் 2022

உலக நீரிழிவு நோய் தினம் – 14 நவம்பர் 2022

உலக நீரிழிவு நோய் தினம் – 14 நவம்பர் 2022 உலக நீரிழிவு நோய் தினம் 1991 ஆம் ஆண்டு உலக நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. 2006ம் ஆண்டு இந்த நாள் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நாள் சர் ஃபெர்ட்ரிக் பேன்டிங் என்பவரது பிறந்தநாள் ஆகும். கனடா நாட்டில் டொராண்டோ நகரில், ஃபெர்ட்ரிக் க்ராண்ட் பேன்டிங் மற்றும் சார்லஸ் ஹெர்பெர்ட் பெஸ்ட் ஆகியோர் 1921 ஆம் ஆண்டு ஜான் மெக்லியாட் என்பவரது ஆய்வகத்தில் முதன்முதலாக இன்சுலினை தனியே பிரித்து எடுத்தனர். ஜேம்ஸ் காலிப் என்பவர் பிரித்து எடுக்கப்பட்ட அந்த இன்சுலினை சுத்திகரித்துக் கொடுத்தார். உலகத்திலேயே முதல் முதலாக 1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொரன்டோ நகரை சேர்ந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த லியோனார்டு தாம்ப்சன் என்ற 14 வயது சிறுவனுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1923 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பேன்டிங் மற்றும் மெக்லியாட் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்தினை நமது உடல் கையாளுவதற்கு உதவி புரிய இன்சுலின் என்ற ஹார்மோன் நமது உடலில் சுரக்கிறது. மாவுச்சத்து மிகுந்த உணவு வயிற்றில் ஜீரணமானவுடன் ரத்தத்தில் சர்க்கரையாக கலக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடல் பயன்படுத்திக் கொள்ளவும் அதிகப்படியாக உள்ள சர்க்கரையை சேமித்து வைக்கவும் இன்சுலின் தேவைப்படுகிறது. இன்சுலின் சுரக்கும் போது சர்க்கரையானது பயன்படுத்தப்பட்டு விடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பான அளவினை அடைகிறது. இன்சுலினின் இந்த பணி நடைபெறாமல் இருக்கும் போது உடலால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தவோ கையாளவோ முடிவதில்லை. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகின்றது. இந்த நிலையே சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு உலக நீரிழிவு நோய் நாளுக்கான பிரச்சாரக் கருத்தாக “நாளைய பாதுகாப்பிற்காக இன்று உடல் நலக் கல்வி அளிப்போம்” என்பதாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நீரிழிவு நோயை குணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் உடல் நல மேம்பாட்டு பணியாளர்களுக்கும் நீரிழிவு நோயுடன் வாழ்ந்து கொண்டிருப்பவருக்கும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வும் உடல் நலக் கல்வியும் அவசியம் என்பதனை இது வலியுறுத்துகிறது. நீரழிவு நோய் பற்றி நாம் அறிந்து கொள்வோம். நீரிழிவு நோய் ஆங்கிலத்தில் டயாபடீஸ் மெலிட்டஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில் டயாபடீஸ் என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் ஒரு திரவத்தை ஒரு கொள்கலத்தில் இருந்து வெளியேற்றுதல் என்று அர்த்தம். நீரிழிவு நோயாளிகள் அதிகளவு சிறுநீரை வெளியேற்றுவதை இது குறிக்கிறது. மெலிட்டஸ் என்றால் லத்தின் மொழியில் இனிப்பு என்று அர்த்தம். நீரிழிவு நோய் உள்ளவர்களது சிறுநீர் மிகவும் இனிப்பாக இருப்பதனை இது குறிக்கிறது. பண்டைய கால இந்திய வைத்தியர்களுக்கே நீரிழிவு நோயின் அறிகுறிகள் தெரிந்து இருந்தன. ஆனால் நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்களும் இந்த நோய்க்கான மருந்துகளும் பெரும்பாலும் 20 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. நீரிழிவு நோய் இரண்டு வகைப்படும். 1936 ஆம் ஆண்டு ஹெரால்ட் பெர்சிவல் ஹிம்ஸ் வொர்த் என்பவர் நீரிழிவு நோயை இரண்டு வகைகளாக பிரித்தார். முதல் வகை நீரிழிவு நோய் அதாவது டைப் 1 டயாபட்டீஸ் மெலிட்டஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மாறுபாட்டால் வருகிறது. இது பெரும்பாலும் சிறு குழந்தைகள் முதல் இளம் வயது உள்ளோருக்கே வருகிறது. கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் அழிந்து போவதால் இந்த நோய் நிகழ்கிறது. தொடர்ந்து முறையாக இன்சுலினை ஊசி மூலம் செலுத்திக் கொண்டு வருவதன் மூலமே இந்த நிலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். பேண்டிங் மற்றும் பெஸ்ட் முதலானோர் இன்சுலினை கண்டுபிடிப்பதற்கு முன் இந்த வகை நோய் தாக்கிய குழந்தைகள் சிறு வயதிலேயே மரணம் அடைந்து வந்தனர். இன்சுலின் மருந்து இந்த வகை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இரண்டாம் வகை நீரிழிவு நோய் அல்லது டைப் 2 டயாபடீஸ் மெலிட்டஸ் என்பது வயது முதிர்ந்தோருக்கு வரும் நோய் ஆகும். முறையற்ற வாழ்க்கை முறை அதிலும் குறிப்பாக உணவு குறித்த சரியான புரிதலின்மை ஆகியவையே இந்த நோய்க்கு காரணம். பரம்பரையாக கடத்தப்படும் மரபணு கூறுகள் இந்த நோய் ஒருவருக்கு வருவதில் பங்கு வகித்தாலும், பல ஆண்டுகளாக மிக அதிக அளவில் தொடர்ந்து மாவு சத்து உணவினை எடுத்து வருவது தான் இந்த நோய் நிகழ முக்கிய காரணமாக இருக்கிறது. அதிகமான மாவுச்சத்து உணவு அதிக அளவில் இன்சுலின் சுரப்பை உடலில் தூண்டுகிறது. இந்த அதிகப்படியான இன்சுலின் உண்ணப்படும் அதிக அளவு மாவுச்சத்தை உடல் கிரகித்துக்கொள்ள ஓரளவுக்கு உதவினாலும் காலப்போக்கில் இந்த அதிக அளவு இன்சுலின் சுரப்பே உடலில் இன்சுலின் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தன்மை கிளம்ப காரணமாகி விடுகிறது. ஒரு கட்டத்தில் இன்சுலின் அதிக அதிகமாக சுரந்தாலும் உடலில் நிலவும் இன்சுலின் எதிர்ப்பு தன்மையால் இன்சுலின் போதாமை என்ற நிலை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை தேங்கி சர்க்கரை அளவு அதிகமாகி விடுகிறது. இரண்டாம் வகை நீரிழிவு நோயானது இன்சுலின் குறைபாட்டால் வருவது அல்ல மாறாக உடலில் சுரக்கும் இன்சுலினுக்கு எதிர்ப்பு தன்மை உடலில் நிகழ்வதாலேயே வருகிறது. இவ்வாறு நிகழும் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையாலேயே ரத்த கொதிப்பு, கல்லீரலில் கொழுப்பு, PCOD முதலான உடல் நல பிரச்சனைகளும் நிகழ்கின்றன. இந்த இன்சுலின் எதிர்ப்பு தன்மைக்கு தீர்வாக உணவில் மாவுச்சத்தினை குறைத்து உண்பதே சரியான தீர்வாக இருக்கும். மாவுச்சத்தினை குறைத்து உண்ணும் போது உடலில் சுற்றும் இன்சுலின் அளவு குறைந்து, இன்சுலின் எதிர்ப்பு தன்மையும் குறைந்து, உடலில் இயற்கையாக சுரக்கும் இன்சுலின் வேலை செய்ய தொடங்குகிறது. இதனால் ரத்த சக்கரை மிகச் சிறப்பாக கட்டுக்குள் வருகிறது. எனவே இரண்டாம் வகை நீரிழிவு அதாவது டைப் 2 டயாபடீஸ் நோய்க்கு மருத்துவர்கள் அளிக்கும் மருந்து மாத்திரைகளுடன் சேர்த்து குறை மாவு உணவு முறை அதாவது உண்ணும் உணவில் மாவு சத்தினை குறைத்து உண்பது மிகச் சிறந்த பலனை அளிக்கும். இன்சுலின் எதிர்ப்பால் வரும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பெறுவோம்! உடல் நலம் காப்போம்!

Learn More